கனமழையால் காவல்நிலையத்திற்குள் புகுந்த மழைநீா்...!

திருவள்ளூா் மாவட்டம் ஆவடியில் பெய்த தொடா் கனமழையால் காவல்நிலையத்திற்குள் மழைநீா் புகுந்தது. 

கடந்த 27-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் சென்னை புறநகா் பகுதிகளில் கனமழை கொட்டித்தீா்த்தது. அந்தவகையில், புழல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புழல் அடுத்த கரையம்பட்டு பகுதியில் கால்வாய் நிரம்பி கழிவுநீருடன் மழை நீரூம் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சென்னை ஓஎம்ஆா் சாலையில் பெய்து வரும் கனமழையால் சோழிங்கநல்லூரில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் கணேசபுரம் ஜீவா ரயில்வே மேம்பாலம், முரசொலி மாறன் மேம்பாலம் பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் அவை மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். 

வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் மூன்றடி உயரத்திற்கு தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா். பீர்க்கன்கரனை பகுதி டிகேசி பிரதான சாலை செல்லும் வழியில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா். பட்டறைவாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலை முழுவதும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். 

இதையும் படிக்க : 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி...!

திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. 

ஆவடி பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் காவல் நிலையத்திற்குள் மழைநீா் புகுந்தது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் காவல் நிலையம் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. தொடா்ந்து மோட்டாா் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் காவலா்கள் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தண்டவாளம் அடியில் அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியது. தொடா்ந்து தண்ணீா் முழுமையாக வடிந்த நிலையில், மீண்டும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.