இடிந்து விழும் நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம்; அச்சத்தில் பணியாற்றும் அலுவலர்கள்!

இடிந்து விழும் நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம்; அச்சத்தில் பணியாற்றும் அலுவலர்கள்!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் உள்ளதால், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுப்பணிக்கு சொந்தமான நீர்வளத்துறை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் தற்போது வரை உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் என பத்து பேருக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 கண்மாய் பாசன விவசாயிகளும் நாள்தோறும் தங்கள் தேவைக்காக இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த அலுவலகம் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது அலுவலகத்தின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து தலையில் விழும் சூழ்நிலையில் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
முகப்பில் விவசாயிகள் காத்திருக்கும் இடத்தில் உள்ள தூண்களில் காங்கிரீட் கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அலுவலகத்தின் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் ஊழியர்களும் விவசாயிகளும் இந்த கட்டிடத்தை அச்சத்துடனே பயன்படுத்தி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதியக் கட்டிடம் கட்டித் தர வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் 

இதையும் படிக்க: "ரம்மியமாக காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பகம்": மனதைக் கவரும் புகைப்படங்கள் உள்ளே!