சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை..! மீன்பிடித்து நூதன போராட்டம்...!

சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை..! மீன்பிடித்து நூதன போராட்டம்...!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி கிராமத்தில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் வசித்து வருகின்றனர். பொதக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சாலைவசதி இன்றி பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், அப்துல் காதர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம், சாலையை செப்பனிட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

இந்நிலையில் குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களை பரப்பி வருகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதி மக்கள் மீன்வளைகளை கட்டி மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில நாட்களுக்குள் சாலையை செப்பனிட,  அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதியினர் எச்சரித்துள்ளனர்.