சமூகவிரோதிகளின் கூடாராமான பாலர் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள பாழடைந்த பாலர் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகவிரோதிகளின் கூடாராமான பாலர் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்துள்ள நெய்வாச்சேரி அரசு  நடுநிலைப்பள்ளி நான்கு தலைமுறைகளை கண்ட பள்ளி என்ற பெருமைக்குரியது.

காரைக்கால் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் கொண்ட பள்ளி என்ற பெருமையை பெற்ற இப்பள்ளியில், திருநள்ளாறு, நெய்வாச்சேரி, சுரக்குடி உட்பட 10க்கும் மேற்பட்ட  சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 288 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி தரம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்ட்டியுள்ளனர்.

எவ்வித அடிப்படை வசதிகளுமே இல்லாத இந்த பள்ளிக்கு அருகிலேயே உள்ள பாலர் பள்ளி கட்டிடம் புதர் மண்டி பாழடைந்து கிடப்பதால் இந்த கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு  விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பாழடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும், பள்ளிக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.