தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த பேராசிரியர்கள்..துணை வேந்தரைக் கண்டித்து போராட்டம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தும் பணிகளை பேராசிரியர் சங்கங்கள் புறக்கணித்துள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த பேராசிரியர்கள்..துணை வேந்தரைக் கண்டித்து போராட்டம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை இரண்டாம் பருவத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே வரலாறு பாடத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.  

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்தநிலையில், ஆசிரியர்களை மதிக்காத துணை வேந்தரின் செயலைக் கண்டித்தும், ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், இரண்டாம் பருவத் தேர்வு தாள்களை திருத்தும் பணிகளை நிறுத்தி பேராசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கு  உரிய நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனிடையே தகுதியில்லாதவர்களை கொண்டு தேர்வுத்தாள் திருத்தும் பணியை பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் என்றும் முறையாக ஒருங்கிணைப்பு குழுவை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.