சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி....எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்?

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி....எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்?

பிரதமர் மோடி வந்தே பாரத் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 8 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னைக்கு வருகை தருகிறார். 

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன முனையத்தைப் பார்வையிடவுள்ளார்.

இதையும் படிக்க : 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின்...கீழடி அருங்காட்சியகம் கண்டு வியந்தேன் - அமைச்சர்!

அதன் பின்பு, சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐ.என். எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்று, சென்னை-கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரெயிலான 'வந்தே பாரத்' ரெயில் சேவையை தொடங்கி வைப்பார்.

இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு செல்லும் பிரதமர், மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு செல்லும் அவர், சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்துவிட்டு, பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல இருக்கிறார்.