சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்...

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். 

சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு சென்னை மாகாண சட்டமன்றம் செயல்படத் தொடங்கிய ஆண்டு 1921.இதன் நூறாவது ஆண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார். 

முதல்வரின் அழைப்பை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானம் மூலம், டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 12.35 மணி அளவில் சென்னை வந்தார்.அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். 

இதை அடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அவர், மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக தலைமை செயலகம் வருகிறார்.

மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். 

மேலும், இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் உரையாற்றுகின்றனர். விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.