நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்து தமிழ்நாட்டு மாணவன் சாதனை...!

நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்து தமிழ்நாட்டு மாணவன் சாதனை...!

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி ஆகியோர் 99 புள்ளி ஒன்பது ஒன்பது சதவிகித மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்நியைில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.  நீட் நுழைவுத் தேர்வில் முதல் 10 இடத்தில் 4 தமிழ்நாடு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதையும் படிக்க : அமலாக்கத்துறையின் ரெய்டு... மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

இதில் விழுப்புரம் மாவட்டம் மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்ததுடன், நீட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவரது பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர் முதல் முயற்சியிலேயே சாதித்து இருக்கிறார். இதில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். 

அதேபோல், ஆந்திராவை சேர்ந்த மாணவர் வருண் சக்ரவர்த்தியும் முதல் இடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக கெளசல் பவுரி 3வது இடத்தையும், சூரியா சித்தார்த் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து  78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 250 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.