தமிழக ஆளுநர் பேச்சை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை கண்டித்து, சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் பேச்சை கண்டித்து  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய தமிழக ஆளுநர் ரவி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும், மனித உரிமைகள் இயக்கம் போல முகமூடிகளை அணிந்து கொண்டு பயங்கரவாதத்துக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்த ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஷேக் முகமது அன்சாரி, பாஜகவின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் நபராக தமிழக ஆளுநர் உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், மக்கள் பிரச்சனையை பேசாமல், பாஜக, ஆர்.எஸ். எஸ் க்கு எது லாபமாக இருக்குமோ அதனை முன்னெடுத்து ஆளுநர் பேசி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய ஷேக் முகமது அன்சாரி, ஆளுநர் ஆர்.என் ரவியின் பேச்சை கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை இன்று மாலை 4 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார்.