மணிப்பூர் : பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை...தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் : பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை...தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின சமூக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரங்கேறி வரும் கலவரத்தின் உச்சமாக பழங்குடியின சமூக பெண்கள் 2 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. குற்றவாளிகளை தூக்கிலடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சென்னை அண்ணா சாலை பள்ளிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லெனின் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பழங்குடி பெண்கள் மீதான பாலியல் சீண்டல் மற்றும் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மணிப்பூர் கலவர கொடூரர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் கோலாகலமாக நடைபெறும் ஆடி திருவிழா... !

அதேபோல், சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலை, மறித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி குற்றவாளிகளை துக்கிலடவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பழங்குடி சமூக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பழங்குடி சமூக பெண்கள் மீதான கொடூர நிகழ்வுக்கு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இதேபோல்,  புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் மாநில அரசு தவறியதால் பல்வேறு கொடூரச் செயல்கள் அரங்கேறி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.