”உதயநிதியின் தலைக்கு 10 கோடி” சவால் விட்ட சாமியார் மீது வழக்கு பதிய கோரி மனு...!

”உதயநிதியின் தலைக்கு 10 கோடி”  சவால் விட்ட சாமியார் மீது வழக்கு பதிய கோரி மனு...!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு  மிரட்டல் விடுத்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவரும், வீரத்தமிழர் பேரவை என்ற அமைப்பு சார்பாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா என்ற சாமியார்  சனாதானம் குறித்த கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்து சர்ச்சையை கிளப்பினார்.

உதயநிதியின் கருத்தை திரும்ப பெறாவிட்டால் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என மஹாரஸ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா மிரட்டல் விடுத்தார். இவ்வாறு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா, மஹாராஸ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா  ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெவிக்கப்பட்டிருந்தது.

இதே போல் உதயநிதி ஸ்டாலினின் சனாதானம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் ஆண்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக சென்னை காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் மத துவேசத்தை தூண்டும் விதமாக சனாதானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு, கொரோனா போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை எதிர்த்தால் மட்டும் போதாது, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க   |  உதயநிதி கருத்தை திருத்தி சொல்பவர்களுக்கு கார்த்தி சிதம்பரம் கண்டனம்!