"ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்பட்ட அமைப்பா?" தமிழக அரசு சரமாரி கேள்வி!

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி வழங்க அரசு மறுத்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்பட்ட அமைப்பா அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என  அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பேரணியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது எனவும்  அரசு தரப்பில்  வாதம் முன்வைக்கப்பட்டது. 

மேலும்  தேவர் குருபூஜை உள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, பேரணி குறித்த முழு விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை என  காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதை ஏற்று கொண்ட நீதிபதி, தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்றும்  ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.