30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் விடுதலை!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை ஆனார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் விடுதலை!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
 
கடந்த 11ம் தேதி இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் நேற்று எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளது. மேலும், ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161- ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை என்றும் பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது என்றும் தமிழக அரசின் வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் இன்று பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.