அங்கன்வாடி மூடியதால் மக்கள் அவதி...! திறக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம்...!

அங்கன்வாடி மூடியதால் மக்கள் அவதி...!  திறக்கக்கோரி  உண்ணாவிரத போராட்டம்...!

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் அண்ணா நகரில் மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டி பாளையம்  அருகே உள்ள நிச்சாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் சுமார் 300 க்கும் மேற்பட்ட  கூலித்தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்திற்கு அண்ணாநகரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் அனுப்பி விட்டு வேலைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன் வாடியில் விஷ பூச்சிகள் வருவதாக  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் திடீரென அண்ணாநகர் அங்கன்வாடி மையத்தை மூடிவிட்டு இங்குள்ள குழந்தைகளை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வருமாறு கூறி உள்ளனர்.

காலையில் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் போது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்று வந்த பெற்றோர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். மேலும், 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள அங்கன் வாடி மையத்திற்கு  குழந்தைகளை அழைத்து செல்ல முடியாத நிலையில் அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்தில் குழந்தைகளுடன் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து,  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிக்க  | சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது - அமைச்சர் உறுதி!