நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க கோரி மக்கள் போராட்டம் ...!

சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க கோரி மக்கள் போராட்டம் ...!

சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தில் நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.      
 
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ஐந்து ரூபாய், ஆறு ரூபாய் என மிகக் குறைந்த தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை போராட்டத்தின் போதும் அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துஉள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் உரிய தொகை வழங்கப்படும் என உறுதியளிப்பதும் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுவரை யாருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படாததால்  ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று அல்லிவிளாகம் கிராமத்தில் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தங்கள் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.