ஆம்னி பேருந்துகள் இயங்குமா?... இயங்காதா?... மக்கள் குழப்பம்!

ஆம்னி பேருந்துகள் இயங்குமா?... இயங்காதா?... மக்கள் குழப்பம்!

தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு,  தமிழ்நாடு ஆம்னி பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், விடுமுறை முடிந்து அனைவரும் ஊருக்கு செல்ல திரும்ப தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடித்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்திருந்தனர். 

இதனால் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததையடுத்து, தவறாக ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் விடுவிக்கப்படும் எனவும், மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என  தெரிவித்திருத்தார். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும்,  தங்களது சங்கத்தில் உள்ள 90 சதவீத பேருந்துகள் அனைத்தும் இயங்கும் எனவும், தெரிவித்தார்.

ஆனால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதையடுத்து இரண்டு சங்கங்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கருத்து வேறுபாட்டால் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் மக்கள் இன்று பயணம் செய்ய முடியுமா என்ற குழப்பத்துடன் இருந்து  வருகின்றனர்.