கோடை வெயிலில் இருந்து தப்பிக்க.. குளத்தில் குதித்த இளைஞர்கள்...! நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நீந்தி நீந்தி வெப்பத்தை தணித்தனர்...!

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க.. குளத்தில் குதித்த இளைஞர்கள்...!  நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து  நீந்தி நீந்தி  வெப்பத்தை தணித்தனர்...!


கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மெரினா கடற்கரை அருகில் அமைந்துள்ள மாநகராட்சி சொந்தமான நீச்சல் குளத்திற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் நீண்ட வரிசைகளில் வெகுநேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான  டிக்கெட்டின் விலை பெரியவர்களுக்கு 50 ரூபாய் எனவும்  சிறியவர்களுக்கு 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 34-35 டிகிரி செல்சியஸ் டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.  கடந்தாண்டை விட இந்தாண்டு வெயில் அளவு அதிகரித்துள்ள நிலையில் மெரினா  நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து வருகின்றனர்.

மேலும் இன்று வார விடுமுறை நாட்கள் என்பதாலும்  அதே போல் பிளஸ், 2 தேர்வும் முடிவடைவதால், நீச்சல் குளத்துக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும், ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து இங்கு நீச்சல் குளியல்  துவங்கப்பட்டுள்ளதால், நீச்சல் குளத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.  இதனால் நீச்சல் குளத்தில் தண்ணீரும் நாள்தோறும் இரண்டு முறை தூய்மைப்படுத்தப்படுகிறது.

தற்போது நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாணவர்கள் என பலரும் குளித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் முதலில் நீச்சல் குளத்திற்கு வரும்  பொழுது அருகில் உள்ள ஷவரில்  குளித்த பிறகு தான் நீச்சல் குளத்திற்குள்  அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு உட்பட்டு நீச்சல் குளத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு எச்சரிக்கையாக   பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிகழ்த்தப்படுகிறது. அதன்படி, 14 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர. சென்னை மாநகராட்சி உத்தரவு நான்கரை அடி உயரம் உள்ள இளைஞர்கள் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் நீச்சல் குளம் ஊழியர்கள் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக நீச்சல் தெரியாதவர்கள், மற்றும்  தவறான தகவல் கொடுத்து உள்ளே வரும்  நபர்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது என எச்சரிக்கை பலகை ஒட்டப்பட்டு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க ; குறுநில மன்னர்களின் ஆட்சி...! அன்புமணி ராமதாஸ் சூசகம்...! - https://www.malaimurasu.com/posts/tamilnadu/Anbumani-demands-seperation-of-Thiruvannamalai-District