ஆப்கானிஸ்தானிலிருந்து தமிழகம் வருபவர்கள் இதை செஞ்சே ஆகணும்... அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் நுழைவு வாயில்களில் போலியோ தடுப்பூசி செலுத்துமாறு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தமிழகம் வருபவர்கள் இதை செஞ்சே ஆகணும்...  அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பத்து ஆண்டுகளாக போலியோ இல்லாத நாடாக திகழ்கிறது, அதேபோல் தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. தெற்கு ஆசியாவை போலியோ இல்லாத பகுதியாக மார்ச் 7ஆம் தேதி 2014 அன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உலகம் முழுவதும் போலியோ பாதிப்பு என்பது இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை அது பாதிக்கிறது. பயண வழிகளில் போலியோ மற்ற நாடுகளிலிருந்து பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது.

போலியோ பரவாமல் இருக்க, போலியோ தொற்றுநோய் உள்ள நாடுகள் மற்றும் போலியோ மீண்டும் பரவும் நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு அனைத்து இடங்களிலும் (விமானம், ரயில்வே, கடல் மற்றும் நிலம்) சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப போலியோ தடுப்பூசி போடப்படள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் அனைத்து மாநிலங்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து  பயணிகளின் வருகையை அதிகரித்து வருகின்றன. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையம்/ துறைமுகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் பயணிகளின் தினசரி விவரங்களை சேகரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அப்படி ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு அனைத்து நுழைவு வாயில்களிலும்  (விமானம் , ரயில்வே, கடல் மற்றும் தரைவழி பயணம்) போலியோ  தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதன் விவரத்தை தினமும் மாலை 5 மணிக்கு தனக்கு அனுப்புமாறு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.