ஆடி வெள்ளி திருவிழா...கோலாகலமாக நடைபெற்ற தீமிதி உற்சவ விழா!

ஆடி வெள்ளி திருவிழா...கோலாகலமாக நடைபெற்ற தீமிதி உற்சவ விழா!

ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  விளந்திட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவத்தில், 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். 

கோவை மாவட்டம்  தேக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு 108 லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் 25 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது தமிழக அரசு!

காஞ்சிபுரம் தும்பவனத்து அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

கரூரில் அமைந்துள்ள  வராகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல்  திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்  உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள  இடையன் காளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.  முன்னதாக இடையன் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.