அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார். மேலும் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் அனைத்து  மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.  இந்த கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க : விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு...காரணம் என்ன?
 
மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளின் நிலை குறித்தும், நிர்வாக வசதிக்காக சில புதிய மாவட்டங்கள் உருவாக்குவது, சில மாவட்டங்களை இணைத்து ஒரே மாவட்டமாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கபபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிமுக குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியிருந்தார். தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.