தமிழகத்தில் 2 கடலோர மாவட்டங்களில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும்!

சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ளதாக சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2 கடலோர மாவட்டங்களில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும்!

 1971 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுதில்லியில் உள்ள போா் நினைவு சதுக்கத்தில் நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு நாட்டின் நான்கு திசைகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இதன் ஒரு வெற்றி ஜோதி தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று தொடர்ந்து சென்னை வந்தடைந்துள்ளது. இன்று அந்த வெற்றி ஜோதி சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரவீந்திரன், துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக கப்பல் போக்குவரத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளதாகவும், விரைவில் நிறுவனங்களை இறுதி செய்து போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் 1971 ல் நடந்த போரில் பங்கேற்று தற்போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு பதக்கங்கள் வழங்கப்பட்டது.