அமித் ஷாவின் குற்றச்சாட்டு...பதிலடி கொடுத்த கட்சித் தலைவர்கள்!

அமித் ஷாவின் குற்றச்சாட்டு...பதிலடி கொடுத்த கட்சித் தலைவர்கள்!

வேலூரில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதிலடி கொடுத்துள்ளனர். 

கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகவும், காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள் எனவும் சாடினார். மேலும் தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... !

இதற்கு மறுப்பு தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,  9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என்பதற்கு அமித் ஷாவே தனது உரை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் கேள்விக்கு அமித் ஷா ஆக்கப்பூர்வமாக பதில் கூறவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை அள்ளி வீசியதுபோல் அமித் ஷா கானல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதேபோல், காங்கிரஸ் கட்சி குறித்து அமித் ஷா பேசியதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மன்மோகன்சிங் போன்ற நேர்மையான பிரதமராக மோடியால் ஒரு காலமும் இருக்க முடியாது எனவும், மன்மோகன்சிங் மீது எந்த நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை உள்துறை அமைச்சர் பேசுவதாக குற்றச்சாட்டினார்.