வடதமிழகத்தில் மழை நீடிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்...

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரை கடந்தது. அதிகனமழைக்கு வாய்ப்பு குறைந்ததால் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது.

வடதமிழகத்தில் மழை நீடிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கடந்த 6ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இரண்டாவதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வந்ததால் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்ததால் தமிழகத்தில் சென்னை முதல் நாகை வரை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 30 மணி நேரம் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகள் தீவுகளாய் மாறியுள்ளன.

மழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் சில பகுதிகளில் அதிகனமழையும் பெய்தது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் முக கனமழை பெய்தது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. பின்னர் அதிகனமழைக்கு வாய்ப்பு குறைந்ததால் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது.  இருப்பினும் மழை மேகம் மற்றும் காற்று சுழற்சி நீடித்து வருவதால் இன்றும்  வடதமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும், படிப்படியாக மழை பொழிவு நிற்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.