கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் - கதறி அழும் பெற்றோர்!

கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் - கதறி அழும் பெற்றோர்!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து கதறி அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. 

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கைதான போராட்டக்காரர்கள்:

சின்னசேலம் அருகே உள்ள கணியமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்களில் பலர் கலவரம் நடந்த இடங்களிலேயே காவல்துறையால் பிடிக்கப்பட்டனர்.   அனைவரையும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 

மாணவியின் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்கள்:

இதனிடையே உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான கடலூர்  மாவட்டம்  பெரிய நெசலூர் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாத வகையில் ஊரின் முகப்பு வாயிலிலேயே 20. க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெறாத வகையில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீதிமன்ற வளாகத்திற்கும் முன் கதறி அழுத போராட்டக்காரர்களின் பெற்றோர்:

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கும் முன் திரண்டு  கதறி அழுதனர்.வேலைக்குச் சென்றவர்களை, கல்லூரிக்கு மற்றும் கடைவீதிக்குச் சென்ற மாணவர்களை பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது என்றும் புலம்பி அழுதனர்.