பரமக்குடி வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்... 400-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின...

பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆற்றின் கரை உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பரமக்குடி வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்... 400-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின...

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து இரண்டாவது முறையாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை மாவட்டம் உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வைகை ஆற்றில் உபரிநீர் கலக்கிறது. ஆகையால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செல்லும் வைகை ஆற்றில், விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. 

இதனால் பரமக்குடி வைகை ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்வையிட, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்நிலையில், கங்கைகொண்டான் கிராமத்தில் வைகை ஆற்றின் கரை உடைந்து, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதைப்போல கொல்லனூர் கிராமத்திலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

வைகை ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால், தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த பொதுமக்கள், பாதுகாப்பாக கங்கைகொண்டான் அரசு பள்ளி மற்றும் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.