பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம் மறுப்பு...

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம் மறுப்பு...

சென்னை கே.கே.நகர்  பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனையடுத்து, அவர் தாக்கல் செய்த  ஜாமீன் மனுவை, உயர்நீதிமன்றம்  நிராகரித்தது. தொடர்ந்து ராஜகோபால் மீது புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தநிலையில் அவர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்.சுதா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி சுதா உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவையும்  தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், எனவே கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் வழக்கை உடனடியாக விசாரித்து  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.