எம்.ஜி.ஆர்.சிலையின் கல்வெட்டு அகற்றம்... செல்லூர் ராஜூவுக்கு அ.தி.மு.க.வில் வலுக்கும் எதிர்ப்பு...

மதுரையில் ஜெயலலிதா திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலையின் கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அகற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ ராஜாங்கத்தின் குற்றச்சாட்டையடுத்து அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

எம்.ஜி.ஆர்.சிலையின் கல்வெட்டு அகற்றம்... செல்லூர் ராஜூவுக்கு அ.தி.மு.க.வில் வலுக்கும் எதிர்ப்பு...
மதுரை கே.கே.நகரில் கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். வெண்கல சிலையை திறந்து வைத்தார். ஜெயலலிதா சிலையை திறந்து வைக்கப்பட்டதன் நினைவாக அவருடைய பெயரில் சிலைக்கு கீழே ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. இதையடுத்த கடந்த 2019-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவுக்கு ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று ஜெயலலிதா பெயர் இருந்த பழைய கல்வெட்டை அகற்றி விட்டு புதிய கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வைத்துள்ளார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பழைய கல்வெட்டை வைக்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.  இதனால் செல்லூர் ராஜூவின் மீது அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். 
 
இந்நிலையில் இது தொடர்பாக செல்லூர் ராஜூவிடம் விளக்கம் கேட்ட போது வெண்கல சிலைகள் புதுப்பிக்கப்பட்டதால் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டதாக கூறினார். மேலும் பழைய கல்வெட்டு அகற்றியதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் மீண்டும் அதே இடத்தில் பழைய கல்வெட்டு நிறுவப்படும் என்றும்  தெரிவித்தார்.