தொடரும் சாராய மரணம்: ஆளுநரை சந்திக்கும் எதிர்கட்சித் தலைவர்!

 தொடரும் சாராய மரணம்: ஆளுநரை சந்திக்கும் எதிர்கட்சித் தலைவர்!

கள்ளச் சாராய மரண விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்க உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை, கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய குப்புசாமி, விவேக் ஆகியோர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அரசு அனுமதியுடன் செயல்படும் பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெற்றது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், முறையற்ற மது விற்பனையால் ஆபத்து நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அரசே ஏற்று மது விற்பனையை நடத்திவரும் நிலையில், அரசு மதுபான விற்பனையில் முறைகேடு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களின் உயிர் காப்பதில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆகவே, தஞ்சை, செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபானம் மற்றும் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு நீதி வேண்டியும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணைக் கோரியும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திங்கள் கிழமை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க:கள்ளசந்தையில் மதுபானம் வாங்கிக்குடித்த இருவர் பலி!!!