செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்திறப்பு..! மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்திறப்பு..!  மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் இன்று உபரி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 100 கன அடி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது. நேற்று  காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 231 கன அடியாகவும், மேலும், நீர் வெளியேற்றம் 138 கன அடியாகவும் உள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 22 அடியை எட்ட இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று  முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் கரையோரம் வசிக்கக்கூடிய சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அது மட்டுமின்றி பருவமழை தொடங்க உள்ள நிலையில் திடீரென அதிகளவில் நீர் வந்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் அதிகரித்து  வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தற்போது முதற்கட்டமாக இன்று உபரி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவித்தியுள்ளார். 

இதையும் படிக்க   | “ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் அறிக்கை