தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த பொதுமக்கள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆடைகள், இனிப்புகள மற்றும் வெடிகளை வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த பொதுமக்கள்...

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளிலும் உள்ள கடைகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

இதேபோல் நாமக்கல் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க திருவள்ளூரில் உள்ள கடை வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போக்குவரத்து சீர்செய்யும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் பொருட்களை வாங்க பொதுமக்கள் வராததால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஞாயிற்றுக் கிழமை தினமான இன்று கோவையில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க கடை வீதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள், சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.