வரும் 16-ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறும்- கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு?

வரும் 16-ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வரும் 16-ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு நடைபெறும்-  கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு?

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தற்பொழுது நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் முறையாக தேர்தல் பணி செய்வதே பாமகவின் தோல்விக்கு காரணம் என மருத்துவர் ராமதாஸ் பேசியதாக தகவல் வெளியான நிலையில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது கூட்டணி குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தியது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாமகவின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டியிடுவதாகவும், நகராட்சித் தேர்தலின்போது அப்போதைய நிலவரத்தை அறிவிப்போம் எனவும் பாமக விளக்கம் அளித்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  இந்தத் தேர்தலின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு பாமகவின் வருங்கால தேர்தல் கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கவும் கட்சி நிர்வாகிகள் மற்ற கட்சிக்கு தாவுவதை கட்டுப்படுத்தவும் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.