"பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தால் சுகப்பிரசவமாகும்" மகப்பேறு மருத்துவர் தமிழிசை கருத்து!

"பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தால் சுகப்பிரசவமாகும்" மகப்பேறு மருத்துவர் தமிழிசை கருத்து!

பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தால் சுகப்பிரசவமாகும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ அரியக்குடி மற்றும் கே.வி. நாராயணசுவாமி நினைவு அறக்கட்டளையின் நூற்றாண்டையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சங்கீத வித்வான் கே.வி. நாராயணசுவாமி சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "சங்கீதத்தில் சிறந்து விளங்கிய, சாதனை படைத்த கே.வி.நாராயணசாமியின் நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை. நான் சங்கீதத்தில் அவ்வளவு பெரிய விற்பன்னர் கிடையாது. ஆனால் பெயரில் தமிழிசை உள்ளதால் இங்கு அழைத்தார்கள் போல. எனது தந்தை எனக்கும், என் தங்கைகளுக்கும் கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்க முயற்சித்தார்கள். என்னை இசை என்று அழைப்பதால் எங்கள் வீட்டில் இசை இருந்தது. ஆனால் பிள்ளைகளுக்கு இசைஞானம் வரவில்லை.

இசைக்கும் மருத்துவத்திற்கும் தொடர்பு உள்ளது. ராகங்கள் என்கிற இசை 50% நோய்களை சரிசெய்கிறது. ஆனந்த பைரவி என்ற ராகத்தை சிகிச்சைக்குப் பின்னர் இருக்கும் அறையில் இசைக்கச் செய்தால் சிகிச்சைப் பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய 50% வலி நிவாரண மருந்துகள் குறைக்கப்படுவதாக விஞ்ஞானப் பூர்வ ஆராய்ச்சி கூறுகிறது" எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் இசை விழாக்கள் நடத்தப்பட வேண்டும். இசையை இளைஞர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். சங்கீதம் என்றாலே வயதானவர்களுக்கு மட்டுமே என்கிற சூழலை மாற்றி குழந்தை முதல் இசையை சொல்லிக் கொடுக்க வேண்டும். இசையை கற்றால் மன அழுத்தமோ, தற்கொலைகளோ நடப்பதில்லை. 

பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தால் சுகப்பிரசவம் ஆகும். உடனே ராமாயணம் படித்தால் சுகப்பிரசவமாகும் என என்னை விமர்சிப்பார்கள். நான் ஆதாரப்பூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும்தான் கூறுவேன். ஏனென்றால் அதனை கூறுவது மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன். சுகப்பிரசவம் நடக்க வாய்ப்புகள் உள்ளது" எனக் கூறினார்.

மேலும், "இசையை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம். பாடல்கள், ஸ்லோகங்களையும் அடிக்கடி கூறும் போது, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் போது, ஸ்லோகம் சொல்லாதவர்களைவிட உட்கிரகிப்பு தன்மை அதிகமாக இருந்ததாக இத்தாலியில் நடந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். 

குத்துப்பாட்டிற்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. சங்கீதத்திற்கான கூட்டம் குறைந்து கொண்டே போகிறது. நல்ல கலாச்சாரத்திற்கான ரசிகர் கூட்டம் அதிகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்-1; நேரடி காட்சிகளை காண ஏற்பாடு!