இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி நாள் அனுசரிப்பு...!

இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி நாள் அனுசரிப்பு...!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், சிலுவைகளை சுமந்தவாறு சிலுவைப் பாதையில் ஈடுபட்டனர். 

உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலையில் பேராலய அதிபர் இருதயராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறை வழிபாடு, சிலுவை ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புனித வெள்ளியையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் சிலுவைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது, இயேசுவின் பாடுகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தபடி மனம் உருக அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க : ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

இதேபோல், சென்னை அமைந்தகரையில் உள்ள அசன்ஷேன் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கூட்டு பிராத்தனையில்  ஈடுபட்டனர்.  இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகளை கலைஞர்கள் தத்துரூபமாக காட்சிப்படுத்தினர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு  3-ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.