செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அரசு வேலைக்கு பணம் பெற்ற புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த வாரம் அமலாக்கத் துறை கைது நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருக்கு இன்று காலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை, உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரை எப்படி காவலில் எடுக்க முடியும் எனவும், சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தினால் என்ன எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், கைதான 15 நாள்களுக்குள் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குறியாக உள்ளது எனவும் வாதிட்டார். மேலும் செந்தில்பாலாஜி விசாரணையை தாமதப்படுத்தவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : ”யானைப்பசிக்கு சோளப்பொறி போல தான்” வெறும் 631 காலிப் பணியிட உயர்வு...!

இதற்கிடையே, கேவியட் மனு தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதயத்தில் இருக்கும் 4 அடைப்புகளை எப்படி போலியாக காட்ட முடியும் எனவும், அமலாக்கத்துறை தவறான வாதங்களை முன்வைப்பதாகவும் வாதிட்டார். 

அதனை தொடந்து இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது எனவும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தியை அளிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை காரணம் காட்டி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என தெரிவித்தனர். 

ஆள்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ள நிலையில், அதன்பிறகு உச்சநீதிமன்றம் விசாரிக்கும் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.