2வது நாளாக வெறிச்சோடிய சாலைகள் : தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் விரட்டியடிப்பு!!

இரவு நேர ஊரடங்கால், தமிழகம் முழுவதும் 2வது நாளாக  அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் சுற்றிய நபர்களை ரோந்து வாகனங்கள் மூலம் சென்று போலீசார் விரட்டியடித்தனர்.

2வது நாளாக வெறிச்சோடிய சாலைகள் : தேவையின்றி சுற்றித் திரிந்தவர்கள் விரட்டியடிப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இது, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து விடிய விடிய தீவிரமாக கண்காணித்தனர். அரசு அனுமதி அளித்த மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து, அத்தியாவசிய பணிகளாக தினசரி பத்திரிகை, பால் விநியோகம், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் மட்டும் ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டன. 

சென்னையை பொறுத்தவரை மாநகர காவல்துறை சார்பில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணித்தனர். இந்த பணிகளில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் அதிரடி நடவடிக்கையால் நேற்று முன்தினம் இரவு மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, வடபழனி 100 அடி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, உள்பட அனைத்து சாலைகளும் இரவு வாகனங்கள் இன்றி வெறிச்சோடின.

சென்னை மாநகரில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு ஊரடங்கின் போது, அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாகவும், முகக்கவசம் அணியாமல் சுற்றியது என 462 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.