செல்பி மோகத்தால் விபரீதம்; புதுமண தம்பதி உயிரிழப்பு!

செல்பி மோகத்தால் விபரீதம்; புதுமண தம்பதி உயிரிழப்பு!

திருவனந்தபுரத்தில் திருமணம் ஆகி ஐந்து நாட்களே ஆன நிலையில், செல்பி மோகத்தால் புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் சித்திக் - 
நௌபி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் திருமணமும் ஆகி உள்ளது.

திருமணத்தை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிக்காக திருவனந்தபுரத்தில் - பள்ளிக்கல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். விருந்து நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கல் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது புதுமண தம்பதியினர் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் இருவரும் திடீரென கால் வழிக்கி ஆற்றிற்குள் விழுந்துள்ளனர். இதைப் பார்த்த அவர்களின் உறவினரான அன்சில் என்ற வாலிபரும் இவர்களை காப்பாற்ற ஆற்றிற்குள் குதித்துள்ளார்.

இதில் உறவினரான அன்சிலும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் நடத்திய தேடுதலில் அன்சிலின் உடல் மட்டும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து புதுமண தம்பதியினரின் உடல்களை தேடி வந்த நிலையில் இன்று காலையில் இருவரது உடலும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணமான ஐந்தே நாட்களில் புதுமண தம்பதியினர் உயிரிழந்ததும், அவர்களை காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:கோவில் உண்டியல்களை கையாளுவதில் விதிகள் பின்பற்றப்படுகிறதா? உயர் நீதிமன்றம் கேள்வி!