சாலை விபத்துக்களை குறைக்க புதிய காவல் உதவி மையம்...! திறந்து வைத்த காவல் ஆணையர்..!

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்துக்களை குறைத்திடும் வகையில் காவல் உதவி மையம் திறப்பு. ஆவடி காவல் ஆணையர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சாலை விபத்துக்களை குறைக்க புதிய காவல் உதவி மையம்...! திறந்து வைத்த காவல் ஆணையர்..!

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. 24மணி நேரமும் பணியில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய இந்த காவல் உதவி மையத்தினை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு பிரதிபலிப்பு சட்டைகளை காவல் ஆணையர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையின் 40கிமீ ஆவடி மாநகர காவல் எல்லையில் வருவதாகவும், துறைமுகத்தில் இருந்து அதிகளவு கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் விபத்துக்களை குறைத்திடும் வகையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று முதலுதவி அளித்தல், போக்குவரத்தை சீர்படுத்துதல், மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் விரைவுபடுத்தி, போக்குவரத்து சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும், விபத்துக்களை குறைத்திடும் வகையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.  விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் மின்விளக்குகள் அமைப்பது, ஒளிர்விப்பான்களை பொருத்துதல், அங்கு போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுதல், தானியங்கி சிக்னல் அமைத்தல் என விபத்துக்களை கட்டுப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, பள்ளிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல்துறை சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாடு போதை பொருள் இல்லா 
என்ற நிலையை அடையும் எனவும் கூறியுள்ளார்.