மீஞ்சூரில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - ஐ.பெரியசாமி

மீஞ்சூரில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - ஐ.பெரியசாமி

மீஞ்சூர் ஒன்றியம், செம்பாசி குப்பம் கிராமத்தில் நிலத்தடி நீர் ஆதாரத்தை ஆராய்ந்து புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், கேள்வி எழுப்பிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியம் செம்பாசி குப்பம் கிராமத்தில் 13 கிராமங்கள் உள்ளதால், அப்பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, செம்பாசி குப்பம் பகுதியில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு 13 கிராமங்கள் உள்ளதால் மக்களின் தேவைக்கேற்ப நிலத்தடி நீர் ஆதாரத்தை ஆராய்ந்து புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மேலும், மீஞ்சூர் பகுதியில் மட்டும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக 254 குடிநீர் பணிகள் 18.68 கோடி மதிப்பீட்டில் 2022-23ம் ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று  வருவதாகவும் தெரிவித்தார்.