கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள்...

கனமழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும்  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள்...

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் விளைவால் பெரும்பாலான மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, அவைகளில் இருந்து உபரிநீர்  திறக்கப்பட்டது. இதன்விளைவால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை  ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நாராயணபுரம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி, அதிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை வெள்ளத்தால் சூழப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக, வேலுர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய காட்டாற்று வெள்ளம்,  ஒடுகத்தூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்வதோடு, விளைநிலங்களையும் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம், பழைய பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு பாய்ந்தோடுகிறது. செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிவதால், அதற்கு வரும் நீர் முற்றிலுமாக கிளி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் மற்றும் கண்டையநல்லூர் கிராமங்களில் தொடர் மழை காரணமாக 200 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் கரும்பு உள்ளிட்டவை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.