மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 3-வது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளர்களாக நாகராஜன், லீலாவதி ஆகியோர் உள்ளனர். இதன் மூலமாக சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பேரூராட்சி பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக அலுவலக நடவடிக்கையை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.  

இந்நிலையில், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த அவர்கள், அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களின் செல்போன்களை பெற்று கொண்டு தங்களது சோதனையை தொடங்கினர். அப்போது மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.