பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்...!

மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

வங்க கடலின் வடமேற்கு பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

அதன்படி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கட்டுபாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியை பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டனர். அப்போது நீர் மட்டம் உயர்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு  ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து செங்குன்றத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினரை சந்தித்தனர்.  புழல் ஏரியிலிருந்து நான்காவது நாளாக இரண்டாயிரம்  கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டன.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக கழிவறை வசதிகள் உள்ளனவா என கேட்டறிந்த அமைச்சர் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  தாம்பரம் மாநகராட்சியில்  மழை காலங்களில் பல்வேறு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும்  மக்களை தங்க வைக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.