சவுக்கு சங்கர்‌ மீது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குப் பதிவு...!!

சவுக்கு சங்கர்‌ மீது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குப் பதிவு...!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி  4 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும் அதைத்தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதும் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கர்‌ மீது அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக 4 அவதூறு வழக்குகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களில், பல்வேறு யூ டியூப் தளங்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே  கவிழ்த்ததைப் போல, தமிழகத்தில் திமுக அரசை கவிழ்த்து விடுவதாக தனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் பார்களை தான்  நடத்தி வருவதாகவும், அதனால் தன் மீது திமுகவினர்   விரக்தியில் இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல,  ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளதாகவும், அரசியல் விரோதிகளின் தூண்டுதலின் பெயரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கரை அவதூறு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் மனுக்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செந்தில்பாலாஜியின் இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க:தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்!