"அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற, கோப்புகளே வரவில்லை என்று ஆளுநர் மறைப்பதா?" அமைச்சர் ரகுபதி கேள்வி!

"அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற, கோப்புகளே வரவில்லை என்று ஆளுநர் மறைப்பதா?" அமைச்சர் ரகுபதி கேள்வி!

முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோப்புகளே வரவில்லை என்று ஆளுநர் மறைப்பதா? என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இசைவு கோரி மத்திய புலனாய்வு அமைப்பு ஆளுநரிடம் அறிக்கை அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு குற்றச்சாட்டுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு கேட்டு ஆளுநருக்கு கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காதது மட்டுமின்றி அந்த கோப்புகளே தனக்கு வரவில்லை எனக் கூறியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடந்த 3-ஆம் தேதியன்று கடிதம் எழுதியதை குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்  உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள அவர்,  முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ஆளுநர் மாளிகையில் இருந்து பெறப்படவில்லை என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு கடந்தாண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அன்றே அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியுள்ள சட்டத்துறை அமைச்சர், அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, 298 நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டு, கோப்பை பெற்றுக் கொண்டற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டு விட்டு, தற்போது உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க:"செந்தில் பாலாஜி வாயை திறந்தால் தி.மு.க அரசு கவிழ்ந்து விடும் " எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!