'டெட்ரா பேக்' மூலம் மது விற்பனை செய்ய நடவடிக்கை... அமைச்சர் முத்துசாமி தகவல்!

'டெட்ரா பேக்' மூலம் மது விற்பனை செய்ய நடவடிக்கை... அமைச்சர் முத்துசாமி தகவல்!

மதுக்கடைகளில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

 ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முன்னர் சில இடங்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்றதாக கூறிய அவர், அதை தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தடுத்து உள்ளதாக கூறினார். எங்காவது ஒரு சில இடங்களில் தவறுகள் நடைபெறலாம் அதனை மறுக்கவில்லை என ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி  அவற்றையும் விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இவற்றையெல்லாம் சரி செய்ய ஓரிரு மாதம் காலம் ஆகும் எனவும் மதுக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பாதகவும், அவர்களின் பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும். குறுகிய காலத்தில் டாஸ்மாக்கில் எந்த ஒரு தவறும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து  பேசி வருவதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் டெட்ரா பேக் விற்பனை நடைபெற்று வருவதை அதிகாரிகள் குழு  ஆய்வு செய்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து, தொழிற்சங்கள், மதுபான உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் டெட்ரா பேக் தொடர்பாக பேசி உள்ளதாக தெரிவித்த அவர் மற்ற மாநிலங்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையின் டெட்ரா பேக் அமுல்படுத்தப்படும் எனக் கூறினார்.

தற்போது பாட்டில்களை விவசாய நிலங்கள், சாலைகளில் வீசி செல்வதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, இதையெல்லாம் தவிர்ப்பதற்காக டெட்ராபேக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் மேலும் டெட்ரா பேக்கில் கலப்படம் தவிர்க்கப்படும் எனவும் கையாளுவது சுலபம் எனவும் கூறிய அவர் மறுசுழற்சி செய்தவதால்  விவசாயிகள் நன்மை பெறுவர் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!