மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,09,000 கன அடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 81 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்களிலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,09,000 கன அடியாக அதிகரிப்பு!!

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து. கர்நாடக மாநில அணைகள் நிரம்பி வரும் நிலையில் அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனிடையே மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 113 புள்ளி 96 ஆக இருந்த நிலையில் தற்போது 114 புள்ளி 81 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து நீடித்தால் இன்று நள்ளிரவுக்குள் அணை முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நீர் திறப்பும் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 பாசனம் மற்றும் குடிநீருக்காக நீர் திறக்கப்படும் அளவைப் பொருத்து நீர் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது 20 ஆயிரம் கன அடி திறந்து விடப்படுவதால் அணை நீர் மின்நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி உள்ளிட்ட 7 கதவணை மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் வீதம் 210 மெகாவாட் என மொத்தம் 460 மெகாவாட் அளவுக்கு முழுமையாக மின்உற்பத்தி செய்யப்படுகிறது.