"ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!

சென்னை மெட்ரோ ரயிலில் நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டால், நான்காண்டு வரை சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அலுவல் நேரங்களில்  காலை மாலை இருவேளைகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

இந்நிலையில் நெரிசல் மிகு நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு மற்றும் ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்கள்  ஏற்படுகிறது.

மேலும் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக கதவுகள் மூடப்பட்டவுடன் கதவுகளை திறக்க பயணிகள் முயற்சிப்பது, தானியங்கி கதவுகள் மூடும்போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை தடுக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதாகவும் இதனால் அலுவல் நேரங்களில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே பயணிகளால் ஏற்படும் இத்தகைய சூழ்நிலை தடுக்க மெட்ரோ ரயில்  நிர்வாகத்தின் சார்பில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2002 பிரிவு 67ன் கீழ் இரயிலின் இயக்கத்தை தடுப்பது மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதற்காக பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னையை பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது!