மேகதாது விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்த தமிழக அனைத்து கட்சிக் குழு!!

மேகதாது விவகாரத்தை காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

மேகதாது விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்த தமிழக அனைத்து கட்சிக் குழு!!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில் அண்மையில் நடைபெற்ற அம்மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தில் அணைகட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத் தொடரில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகா தீவிர முயற்சி எடுத்தது. எனினும் தமிழகத்தின் எதிர்ப்பால் தீர்மானம் குறித்து விவாதிப்பதை ஆணையம் கைவிட்டது.

இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கர்நாடகாவின் கோரிக்கையை அண்மையில் ஏற்றுக் கொண்டார். இதனைக் கண்டித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடாரப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பால் ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இரண்டாவது முறையாக ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என வலியுறுத்துவதற்காக தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்றது. மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்ற குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்தர் சிங் ஷெகாவத்தை சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டப்படாது என கஜேந்திரர் சிங் ஷெகாவத் உறுதியளித்ததாகத் கூறினார்.