ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்... திருவள்ளூரில் போலீஸ் விசாரணை...

திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் தனியார் மருந்து தொழிற்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட காலாவதியான மருத்துவ கழிவுகள் கொட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்... திருவள்ளூரில் போலீஸ் விசாரணை...

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு  அதனால் தண்ணீர் மாசடைவதாகவும்  இந்த தண்ணீரை கால்நடைகள் பருகுவதால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த  புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் மறைமலை நகரில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் அங்கிருந்து காலாவதியான மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து இருளஞ்சேரி ஏரியில் கொட்டப்பட்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மப்பேடு போலீசார் தமிழ்வாணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலாவதியான மருத்துவக் கழிவுகளை ஏன் இங்கு கொட்ட வேண்டும் என்றும், அந்த தனியார் மருந்து தொழிற்சாலை குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.