மாமன்ற கூட்டம்...! கோபமடைந்த மேயர் பிரியா...!!

மாமன்ற கூட்டம்...! கோபமடைந்த மேயர் பிரியா...!!

மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் மேயர் கோபமடைந்து பேசியுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு ( வார்டு எண் 34)  தனது வார்டில் குப்பைகள் சரிவர அப்புறப் படுத்தப் படுவதில்லை எனவும் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளதாகவும்  விளையாட்டு திடல் வசதி இல்லாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.  இப்பிரச்சினைகளை உடனடியாக தீரக்காவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒலிப்பெருக்கி துண்டிக்கப்படுவது நியாயம் இல்லை எனவும்  குற்றச்சாட்டை முன்வைத்தார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பேச முயன்றதால்  மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் குறுக்கிட்டு அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். 
மேயர் குறிக்கிட்டு பேசியும் அமளி தொடர்ந்ததால் கோபமடைந்த மேயர், அனைவருக்கும் அவையில் பேச சமமாக நேரம் ஒதுக்கப்படுவதாகவும் மேயர் பேசும்போது அவையில் யாரும் குறுக்கீடு செய்ய கூடாது எனவும்  கோவத்துடன் எச்சரித்தார்.

பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அவையில் அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கத்தை அளித்தார்.