நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...!!

நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...!!

சாந்தோம் பகுதியில் கட்டி முடிக்கப்படும் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கே ஒதுக்கீடு செய்யவேண்டும் என மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சாந்தோம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் 1188 குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நெச்சிக்குப்பத்தில் வாழும் மீனவ குடும்பங்களுக்கும் வழங்கிட வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.  இந்த வீடுகளில் 2021ல் டுமில்குப்பம் பகுதியில் உள்ள வாரிய வீடுகள் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் 216 வீடுகளும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 108 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  எஞ்சியுள்ள 864 வீடுகளும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

ஆனால் அரசு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக கடந்த ஏப்ரல் 26 அன்று டுமில்குப்பம் மற்றும் செல்வராஜ் நகர் பகுதி மக்களுக்கு கூடுதலாக 324 வீடுகளை ஒதுக்கீடு செய்து குடியமர்த்த வாரிய அதிகாரிகள் முயற்சித்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாரதி, ரூபாஷ், ரவிக்குமார், கோசிமணி ஆகியோரை சிறையில் அடைத்துள்ளனர். 

இச்சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை மீனவ மக்கள் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவியுள்ளது. தமிழக அரசும், அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகளின்படி வீடுகள் ஒதுக்கப்படும் என்று நம்பியிருந்த மீனவ மக்களுக்கு இந்நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு எஞ்சியுள்ள 864 வீடுகளையும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்கிடவும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்திடவும்  சிபிஐ (எம்) மாநிலக்குழு சார்பாக வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க:மாநில கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்...! அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழு கண்டனம்...!!